Saturday, November 6, 2010

முதல் பூ

அஸ்ஸலாமு அலைக்கும்,

நீர்த்தேக்கம்
கிருமிகளின் குடியிருப்பு.

என்று 6-ம் வகுப்பில் எழுதிய ஹைக்கூ முயற்சி என் எழுத்துலக வாழ்வில் முதல் படி. பின்னர் சுஜாதாவின் ஹைக்கூ பற்றிய புத்தகத்தை படித்துதான் இது ஹைக்கூவே இல்லை என்று தெரியும். இருந்தாலும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

பின்னர் ராஜேஷ்குமாரில் ஆரம்பித்த இலக்கிய(!!!!!!!) ஆர்வம் சுஜாதாவை படிக்கும் பொழுது முழுமை அடைந்தது. நமதூரில் உள்ள பொது நூலகம் என் படிப்புப் பசிக்கு நல்ல தீனி போட்டது. அசோகமித்ரன், பிரபஞ்சன், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர்னிகா நாசர், சுபா, தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன், மாலன், வாஸந்தி, அனுராத ரமணன் என்று கலவையாய் படித்தேன். என்ன பல குப்பைகள் சில மாணிக்கங்கள் கிடைத்தன.

ராஜேஷ்குமாரின் ஆயிரம்(சொச்சம்) நாவல்களையும் படித்த அபூர்வ சிகாமணி நான். ஆனால் சில நாவல்கள் படித்த பின்பு தமிழ் துப்பறியும் நாவல்களின் பொது டெம்ப்ளேட் பிடிபட்டு போனது. வித்தியாசம் என்றால் சுபா மற்றும் சுஜாதாவின் கதை சொல்லும் முறைதான் சற்று ஆறுதல். சுஜாதாவின் எல்லாப் புத்தகங்களையும் தேடித் தேடிப் படித்தேன்.
 
புத்தக ஆர்வம் எந்த அளவுக்கு என்றால் சில நேரங்களில் புத்தகமே இல்லாமல் டெலிபோன் டைரக்டரியைப் படித்திருக்கிறேன். சில வலைப்பூ முயற்சிகள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்த்து இந்த வலைப்பூவாவது நான் அறிந்தவற்றை பகிர்கின்ற களமாக அமைய வேண்டும் என்ற இறை வேண்டலோடு முதல் பதிவை இடுகிறேன்.